அஹிம்சையின் வலிமை

>> Sunday, September 5, 2010

அஹிம்சையின் வலிமை

மஹாத்மா காந்தி அவர்களின் பேரனும், எம்.கே.காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் நான்வயலன்ஸ் ஸ்தாபனத்தின் நிறுவனருமான திரு.அருண் காந்தி அவர்கள் போர்ட்டோ ரிக்கோ பல்கலைகழகத்தில் நிகழ்த்திய உரையில் பகிர்ந்து கொண்ட தன் சொந்த வாழ்வில் நடந்த நிகழ்வு:

எனக்கு அப்பொது 16 வயது. எனது தாத்தா தென்னாப்பிரிக்க நாட்டின் டர்பன் நகரத்திலிருந்து சுமார் 18 மைல்களுக்கு வெளியே கரும்புத்தோட்டங்களுக்கு மத்தியில் அமைத்திருந்த ஸ்தாபனத்தில் எனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து கொண்டிருந்தோம். நாங்கள் இருந்தது மிக உள்ளடங்கி இருந்த ஒரு கிராம பகுதி. அங்கே அக்கம் பக்கத்தில் கூட மனிதர்களோ வீடுகளோ கிடையாது. ஆகையால், நானும் எனது இரு சகோதரிகளும் சிறிது தொலைவிலிருந்த சிறு நகருக்கு சென்று நண்பர்களை சந்திப்பதற்கும், திரைப்படங்களுக்கு செல்வதற்கும் மிக ஆவலுடன் இருப்போம்.

ஒரு நாள் எனது தந்தை பக்கத்து சிறு நகரில் நடைபெறவிருந்த ஸ்தாபன சந்திப்பு கூட்டத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் மகிழ்வூந்தில் அவரை அழைத்துச்செல்லுமாறு என்னை பணித்தார். நானும் மிகுந்த உற்சாகத்தோடு சம்மதித்தேன். நான் சிறு நகருக்கு செல்வதால் என் அன்னை வீட்டிற்கு தேவையான பொருட்களின் விவரங்களின் வரிசைத்தொகுப்பை என்னிடம் அளித்தார். ஸ்தாபன சந்திப்பு அன்றைய நாள் முழுவதும் நடைபெற இருந்ததால் நான் அன்று முழுதும் அச்சிறு நகரிலேயே இருக்க வேண்டியிருந்தது. ஆகையால் எனது தந்தை மேலும் சில வேலைகளை அன்று அங்கேயே முடித்துவிடுமாறு என்னை பணித்தார். மகிழ்வூந்து பராமரிப்பும் அவற்றுள் ஒன்று.

நான் எனது தந்தையை ஸ்தாபன சந்திப்பு கூட்டம் நடக்குமிடத்தில் அன்று காலை சேர்த்தேன். மகிழ்வூந்திலிருந்து இறங்கிய அவர், “இன்று மாலை 5 மணிக்கு இதே இடத்திற்கு வா, நாமிருவரும் இங்கிருந்து சேர்ந்தே மகிழ்வூந்தில் வீடு திரும்பலாம்” என்று கூறிச்சென்றார்.

நான் அவசரகதியில் எனது வேலைகளை முடித்துக்கொண்டு, மகிழ்வூந்தை பராமரிப்பு சாலையில் விட்டு விட்டு நேராக திரையரங்குக்குச் சென்றேன். திரையரங்கில் அந்நாளில் புகழ்மிக்க ஜான் வேய்ன் நடித்த திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. சிறப்புச் சலுகையாக ஒரு நேர காட்சிக்கான நுழைவுச் சீட்டில் தொடர்ச்சியாக இரு நேர காட்சிகளை பார்க்க அனுமதியளிக்கப்பட்டது. நான் தொடர்ச்சியாக திரைப்படங்களில் மூழ்கி கண்டு களித்துக் கொண்டே நேரத்தை கவனிக்க மறந்தேன். நான் நேரத்தைப் பற்றி நினைவு வந்தவனாக பார்த்தபோது நேரம் 5:30. உடனே எழுந்து ஓடி பராமரிப்பு சாலைக்கு சென்று மகிழ்வூந்தை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக ஸ்தாபன சந்திப்புக் கூட்டம் நடந்த இடத்திற்கு விரைந்த போது நேரம் 6:00. எனது தந்தை அங்கே வெளியே எனக்காக காத்துக்கொண்டிருந்தார்.

அவரை நான் நெருங்கியபோது பொறுமையிழக்கும் நிலையில் என்னிடம், “என்ன ஆயிற்று... ஏன் தாமதம்... ?”என்று வினவினார். நான் ஜான் வேய்னின் மேற்கத்திய படங்களை பார்த்ததினால்தான் தாமதமாயிற்று எனக்கூற அஞ்சினேன், எனது தந்தை, நான் வரும்முன்னரே, மகிழ்வூந்து பராமரிப்பு சாலையை தொடர்பு கொண்டு மகிழ்வூந்து 4:00 மணியளவிலேயே தயாராகி விட்டதை அறிந்துகொண்டார் என்பதையறியாமல், “மகிழ்வூந்தின் பராமரிப்பு பணிகள் முடிய சற்று தாமதமாகிவிட்டது. அதனால் காத்திருந்து எடுத்து வந்தேன்” எனக்கூறினேன்.

நான் கூறியது பொய்யென்று தெரிந்த அவர், “என் வளர்ப்பு முறையில் ஏதோ தவறிருக்கிறது. நான் உன்னை சரியான முறையில் வளர்க்காததினால்தான் உனக்கு என்னிடம் உள்ளதை உள்ளபடி உண்மையாக பேசும் தன்னம்பிக்கயும் தைரியமும் வரவில்லை. உன்னை வளர்ப்பதில் எங்கு நான் தவறிழைத்தேன் என தெரிந்து கொள்ள நான் இன்று இச்சிறு நகரிலிருந்து நம் வீடுவரை 18 மைல்கள் நடந்துகொண்டே சிந்திக்கப்போகிறேன், தெளிவு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்...”எனக்கூறிவிட்டு கிராமத்தை நோக்கிய, செப்பனிடப்படாத, ஒளியற்ற, சாலையின் இருளில் நடக்க ஆரம்பித்தார் எனது பதிலை எதிர்பாராமல்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னுடைய முட்டாள்தனமான ஒரு பொய்யால் சுமார் ஐந்தரை மணி நேரம் எனது தந்தை அந்த கடினமான பாதையில் 18 மைல்கள் மிகுந்த மன உளைச்சலோடு நடந்து கடக்கும்போது மகிழ்வூந்தில் அவரை மெதுவாக பின் தொடர்ந்தேன் வேறு வழியின்றி. அன்று அவருக்கு என்னால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் உடல் வலி எல்லாவற்றையும் யோசித்து, இனி வாழ்வில் எதற்காகவும் பொய் சொல்லக்கூடாது என முடிவெடுத்தேன்.

நான் அடிக்கடி என் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவத்தைப்பற்றி ஆச்சர்யத்துடன் யோசிப்பதுண்டு, எனது தந்தை அன்று என்னை இன்று நம் குழந்தைகளை நாம் தண்டிப்பது போல் தண்டித்திருந்தால் நான் வாழ்வின் மிக முக்கியமான இந்த பாடத்தைக் கற்றிருக்கவே மாட்டேன் என்று. பிற தண்டனைகளை கொடுத்திருந்தால் அந்த உடல் வலியொடு அதை மறந்துவிட்டு மீண்டும் அதே தவறை பல முறை செய்திருப்பேன். ஆனால் அவர் அன்று மேற்கொண்ட சக்தி வாய்ந்த அஹிம்சா வழி நடவடிக்கை என் தவறை என்றும் எனக்கு நினைவுபடுத்தி மீண்டும் செய்யாத மன நிலையை தந்திருக்கிறது.

இதுவே அஹிம்சையின் பலம்...

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP